search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதியின் பெயரால் அவமதிப்பு"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்வயது பழங்குடியினப் பெண் டாக்டரை சாதியின் பெயரால் தொடர்ந்து அவமதித்ததன் மூலம் தற்கொலைக்கு தூண்டியவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியனத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக இழிவுப்படுத்தி பேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர்.

    சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எதிரே சாதியின் பெயரை குறிப்பிட்டு திட்டுவதும், மருத்துவ கோப்புகளை அவர் முகத்தின்மீது தூக்கி எறிவதுமாக இருந்த இவர்களின் இம்சைகளை எல்லாம் தாங்கிக்கொண்ட பாயல் டாட்வி,  இந்த டாக்டர்களில் 3 பேர் பெண்களாக இருந்தும் இவர்கள் தன்னை இவ்வாறு நடத்தி வருவது தொடர்பாக பலமுறை உறவினர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியபோது தனது தொழில்முறையிலான எதிர்காலம் இதனால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் புகார் அளிக்க மறுத்து விட்டார்.

    ஒருகட்டத்தில் சக டாக்டர்களின் கொடுமைகளையும் இழிச்சொல்களையும் சகித்துக்கொள்ள முடியாத பாயல் டாட்வி, கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உற்றார், உறவினர்களும் பழங்குடியின மக்கள் நலச்சங்கத்தினரும் வலியுறுத்தி வந்தனர். 

    இதே கோரிக்கையை மையமாக வைத்து அவர் பணியாற்றிய மருத்துவமனை வாசலில் பாயல் டாட்வியின் தாயார், கணவர் உள்ளிட்ட நெருங்கி உறவினர்களும் வன்சித் புஜன் அகாடி, பீம்சேனா உள்ளிட்ட தலித், பழங்குடியின அமைப்பினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் சிலரிடம் விசாரணை நடத்திய அக்ரிப்பாடா போலீசார், டாக்டர் பக்தி மெஹேரே என்பவரை இன்று கைது செய்தனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் மேலும் இரு டாக்டர்களான அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பை கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    ×